சர்வதேச ராம்சார் ஈரநிலமான மாது கங்கையின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கவும், சுற்றுலாப் படகு சேவைகளை முறைப்படுத்தவும் புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல், சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயகொடி தலைமையில் நேற்று (09) பலப்பிட்டிய பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, மாது கங்கையில் தற்போது 70 சுற்றுலாப் படகு நிறுவனங்களின் கீழ் சுமார் 327 படகுகள் இயங்கி வருவது தெரியவந்தது. அதிகரித்த படகுப் போக்குவரத்தால் ஆற்றங்கரை அரிப்பு, கண்டல் தாவரங்களுக்கு ஏற்படும் சேதம் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் கவலை வெளியிட்டனர்.
இதனையடுத்து, சுற்றுச்சூழல் தாங்கும் திறனுக்கு ஏற்ப படகு சேவைகளை ஒழுங்குபடுத்தும் வகையில் குறுகிய மற்றும் நீண்டகால விஞ்ஞானபூர்வத் திட்டமொன்றை உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, 15 குதிரைத்திறன் அல்லது அதற்குக் குறைவான இயந்திரங்களைக் கொண்ட படகுகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்குதல், படகு இயந்திரங்களுக்கு பெற்றோலை மட்டுமே பயன்படுத்துதல், படகுப் பயணங்களை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுப்படுத்துதல் மற்றும் அனைத்து சுற்றுலாப் படகுகளையும் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், சுற்றுச்சூழல் ஆய்வுகளின் அடிப்படையில் மாது கங்கையில் இயங்கக்கூடிய படகுகளின் அதிகபட்ச எண்ணிக்கையைச் சட்டரீதியாகக் கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் படகுகளை ஒழுங்குபடுத்துவதற்கான விசேட சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்படும் வரை, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியுடன் இடைக்கால வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளைச் செயற்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டு மேற்பார்வைக் குழுவொன்றை அமைப்பதற்கும், இலங்கைப் பொலிஸாரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
மாது கங்கையின் இயற்கைச் சூழலையும் பல்லுயிர் வளத்தையும் பாதுகாத்து, நிலைபேறான சூழல் சுற்றுலாவை உறுதிப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.


