Monday, March 16, 2026
spot_img
Homeபொது செய்திகள்மகன் வாங்கிய கடனுக்காக தந்தையை கடத்தி கைவிரலை வெட்டிய கும்பல்

மகன் வாங்கிய கடனுக்காக தந்தையை கடத்தி கைவிரலை வெட்டிய கும்பல்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் நடராஜன். இவரது மகன் மணிகண்டன். இவர் பலசரக்கு கடை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வியாபாரத்தை மேம்படுத்துவதற்காக பழனிச்சாமி என்பவரிடம் ரூ. 6 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த ரூ.6 லட்சத்திற்கு பதிலாக ரூ.67 லட்சத்தை கொடுக்குமாறு பழனிச்சாமி கேட்டதாக சொல்லப்படுகிறது. அதனை கொடுக்க முடியாத மணிகண்டன் மற்றும் நடராஜன் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு இடம் மாறினர்.

இதனையடுத்து, அவர்களை தொடர்ந்து தேடிவந்த பழனிச்சாமி இறுதியாக அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்தார். பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் மணிகண்டனின் தந்தை நடராஜனை காரில் கடத்தினர். அவர்கள் சீர்காழியில் இருந்து கடலூர் மாவட்டம் காரைக்காடு பகுதிக்கு நடராஜனை கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக கடலூர் முதுநகர் போலீசார் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நடராஜன் மற்றும் அவரை கடத்தி வந்த 5 பேரை போலீசார் பிடித்தனர்

அவர்கள் 5 பேரையும் கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த கும்பல் நடராஜனை கடுமையாக தாக்கியதுடன் அவரது கைவிரலையும் துண்டித்தது தெரியவந்தது. நடராஜனுக்கு தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பிடிபட்டுள்ள 5 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடராஜனை இவர்கள் திமுக கொடி கட்டிய காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து எதன் காரணமாக இவர்கள் திமுக கொடி கட்டிய வாகனத்தில் கடத்தி வந்தார்கள் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகன் வாங்கிய கடனுக்காக தந்தையை கடத்தி கைவிரலை வெட்டிய சம்பவம் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments