பொது இடங்களில் மதுபானப் போத்தல்கள் வீசப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வெற்றுப் போத்தல்களை மீளப் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ், மதுபானம் கொள்வனவு செய்யும்போது ஒவ்வொரு போத்தலுக்கும் மேலதிகமாக 10 இந்திய ரூபா அறவிடப்படுவதுடன், வெற்றுப் போத்தலை மீள ஒப்படைக்கும்போது அந்தத் தொகை நுகர்வோருக்குத் திருப்பி வழங்கப்படுகிறது.
நீதிமன்றில் மனுத் தாக்கல்
கடந்த 2022ஆம் ஆண்டு மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆணையரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலச் செஸ் வரியாக கடந்த நவம்பர் 1ஆம் திகதி முதல் மதுபானப் போத்தல்களுக்கு மேலதிகமாக 10 ரூபா அறவிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த நடைமுறைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனத்திடமிருந்து மதுபானங்களைக் கொள்வனவு செய்யும் எம்.எல்.-2 மற்றும் எப்.எல்.-3 உரிமம் பெற்ற கிளப்புகள் மற்றும் நட்சத்திர விடுதிகளின் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் புதிய முடிவு
இதற்கிடையில், ஒவ்வொரு மதுபானப் போத்தலுக்கும் தனியாக 10 ரூபா அறவிடும் நடைமுறையை மாற்றி, மதுபானத்தின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையுடன் அந்தத் தொகையை இணைத்து அறவிடுவதற்கு கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வெற்றுப் போத்தல்களை மீளப் பெற்றுக்கொண்டு அதற்கான 10 ரூபாவைத் திருப்பி வழங்கும் வகையில், தானியங்கி வெற்றுப் போத்தல் மீளப்பெறும் இயந்திரங்களை (Reverse Vending Machines) நிறுவவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எனினும், கிளப்புகளில் கொள்வனவு செய்யப்படும் மதுபானப் போத்தல்களை உறுப்பினர்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்வதால், வெற்றுப் போத்தல்களை மீண்டும் கிளப்புகளிடம் ஒப்படைப்பது சாத்தியமற்றதாக இருப்பதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால், குறித்த போத்தல்களை டாஸ்மாக் நிறுவனத்திடம் மீள ஒப்படைக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் செஸ் வரி காரணமாக கிளப்புகள் மற்றும் நட்சத்திர விடுதிகளின் வர்த்தகம் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


