Tuesday, September 1, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகிய மூவரும் சிறைச்சாலைகளில் இருந்து இணையவழி காணொளி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், காத்தான்குடியில் ரி-56 துப்பாக்கியால் சுட்டு மேலும் இருவர் கொல்லப்பட்டதாகவும், வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணையின்போது, லண்டனில் உள்ள சந்தேகநபர் ஒருவருக்கு தொடர்ந்து பிடியாணை பிறப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments