உலக வங்கியின் நிதியுதவியுடன் 296 சிறிய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த கிராமப்புற-நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலை மீள்தன்மை திட்டத்தின் (IRDCRP) கீழ் செயற்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டத்திற்காக இதுவரை 5,800 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இது 2029 ஆம் ஆண்டு வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கு சாதாரண புனரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 06 சிறிய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக 256,168,900.88 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட 18 மாவட்டங்களிலுள்ள 290 சிறிய நீர்ப்பாசனக் குளங்களை அவசரகாலப் பதில் கூறு அமைப்பின் (CERC) கீழ் புனரமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகை 5,578,334,825.34 ரூபாவாகும்.
பதுளை மாவட்டத்தில் 97 குளங்கள், இரத்தினபுரியில் 29, மன்னாரில் 24, குருணாகலையில் 19 மற்றும் கண்டி, வவுனியா மாவட்டங்களில் தலா 15 குளங்கள் உட்பட 18 மாவட்டங்கள் முழுவதும் இந்தப் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குளங்களைப் புனரமைப்பதன் மூலம் அவற்றின் நீர் கொள்ளளவு மற்றும் நீர்ப்பாசன நீர் விநியோகத்தின் திறனை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுவதுடன், இதன் மூலம் விவசாயிகள் உரிய காலத்தில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நம்பகமான நீர் விநியோகத்தை வழங்க முடியும்.
அத்துடன், அதிக மழைவீழ்ச்சி, வெள்ளப் பெருக்கு, வறட்சி உள்ளிட்ட காலநிலை அபாயங்களுக்கு மத்தியில் விவசாய நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நீர்ப்பாசன அமைப்புகளின் மீள்தன்மைத் திறனை வலுப்படுத்துவதும் இவ்வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.


