பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை பிணையில் விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த மனுவை அன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், பிணை கோரிக்கை தொடர்பில் அன்றைய தினம் நீதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு சட்டமா அதிபருக்கு அறிவித்தல் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான பி. குமாரன் ரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மனுதாரரான பிள்ளையான் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா, தனது கட்சிக்காரர் கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், ஒரு வருட தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஒருவர் கைது செய்யப்பட்டு ஒரு வருட காலம் கடந்த பின்னர், அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் பிணை விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
இதனடிப்படையில், தனது கட்சிக்காரரைப் பிணையில் விடுதலை செய்யுமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
எனினும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
இதனையடுத்து, குறித்த திருத்தங்களை மேற்கொண்டு திருத்தப்பட்ட மனுவைச் சமர்ப்பிக்க மனுதாரர் தரப்பு இணக்கம் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, குறித்த மனு தொடர்பில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றை எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.


