நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்று நாள் விசேட கண் சத்திரசிகிச்சை வேலைத்திட்டத்தின் மூலம், நீண்டகாலமாக சத்திரசிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள 600 முதல் 700 வரையான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தின் முதல் நாளான நேற்று (20) 200 நோயாளிகளுக்கு கண்புரை அகற்றும் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டாம் நாளான இன்று (21) மேலும் 300 நோயாளிகளுக்கு சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். மூன்றாம் மற்றும் இறுதி நாளான நாளை (22) மேலும் 200 முதல் 300 வரையான நோயாளிகளுக்கு சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை கண் மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் ஏற்பாட்டில், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒத்துழைப்புடனும் ஜனாதிபதி நிதியத்தின் நிதி அனுசரணையுடனும் இந்த விசேட மருத்துவ வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.


