இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், எமது நாட்டில் முதல் முறையாக தேசிய ஆராய்ச்சித் தேவைகளைக் கண்டறிந்து முன்னுரிமை அளிப்பதற்காக ஒரு புதிய தற்காலிகக் குழு ஒன்று கடந்த 07 ஆம் திகதி அமைக்கப்பட்டது.
தேசிய அபிவிருத்தி இலக்குகள் மற்றும் தேசியத் தேவைகளின் அடிப்படையில் நாட்டில் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் வகைப்படுத்துவதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய மற்றும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் தேசிய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவின் (NASTEC) தலைவர் பேராசிரியர் ரொஹான் பெர்னாண்டோ ஆகியோர் இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குவார்கள்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிபுணர்கள் 20 பேர் இந்தக் குழுவில் இடம்பெறுவர்.
பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கைத்தொழில் மற்றும் அரச நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கைகளை தேசிய வளர்ச்சி இலக்குகளுடன் சீரமைப்பதும், தேசிய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உரியவகையில் பயன்படுத்துவதற்காக ஆராய்ச்சி முன்னுரிமைகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீட்டை ஊக்குவிப்பதும் இந்தக் குழுவின் ஏனைய முக்கிய பணிகளாகும்.


