Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தமிழர்களின் மரபுரிமைச் சின்னங்கள் வழக்கொழிந்து போகின்றன - யாழ். மாவட்ட செயலர்

தமிழர்களின் மரபுரிமைச் சின்னங்கள் வழக்கொழிந்து போகின்றன – யாழ். மாவட்ட செயலர்

தமிழர்களுடைய மரபுரிமைச் சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகிறது. பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் புராதன சின்னங்கள் அவற்றை விட்டு அகன்றுபோகின்ற தன்மையும் காணப்படுகிறது என யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

தொல்லியல் திணைக்களத்தின் 135ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொல்லியல் தின நிகழ்வு யாழ். கோட்டை வளாகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை (23) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

எமது வரலாற்றுத் தொல்லியல் மரபுரிமைச் சின்னங்கள் மற்றும் மரபுரிமை மையங்களை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். தொல்லியல் மையங்கள் சுற்றுலாத்துறையுடன் இணைந்த வகையில் செயற்படுத்தும்போது மக்கள் இது தொடர்பில் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாக அமையும்.

யாழ். மரபுரிமைச் சின்னங்களை பார்வையிடுவதை மக்கள் இன்று குறைத்துக்கொண்டு செல்கின்றார்கள். பல்வேறுபட்ட தொல்லியல் சின்னங்கள் வரலாற்றுப் பெறுமதி மிக்கவை. மிகப் பெறுமதியான பொக்கிஷமாக யாழ்ப்பாண கோட்டை காணப்படுகிறது.

ஆனால், எமது யாழ்ப்பாண மக்கள் அதனை பார்வையிடுவது குறைவாக உள்ளது. காலி கோட்டை போல பல்வேறு சுற்றுலாசார் செயற்பாடுகளைக் கொண்ட கோட்டையாக யாழ்ப்பாணக் கோட்டையினை மாற்றவேண்டும். அதற்கான முயற்சிகளும் எம்மால் எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு வாழும் கோட்டையாக யாழ்ப்பாணக் கோட்டையை மாற்றி தமிழ் மரபுரிமைகளை உள்ளடக்கிய கலையம்சங்களை யாழ்ப்பாண கோட்டையில் உள்ளடக்குவதன் மூலம் தமது வாழ்நாளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தை யாழ்ப்பாண கோட்டையில் கழிப்பதற்கு பலர் முன்வருவார்கள்.

மேலும், எங்களுடைய மாவட்டத்திலே பல தொல்லியல் சின்னங்கள் இருந்தாலும் மந்திரி மனை போல பல சின்னங்கள் நிலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.

தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகிறது, பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது, அவ்வாறான நிலையில் புராதன சின்னங்கள் அவற்றை விட்டு அகன்று போகின்ற தன்மை காணப்படுகிறது.

மரபுரிமையுடனான சுற்றுலா மேம்பாட்டுக்கு அமைய, எமது பழைய கச்சேரியினை உலக வங்கியின் அனுசரணையில் புனரமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினுடைய பங்கு பல்வேறுபட்ட விடயங்களில் கிடைத்து வருகிறது.

எனவே, எமது மரபுரிமைகளைப் பேணுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்டத்தின் தொல்லியல் மரபுரிமைகளை தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து பாதுகாத்து வரும் தொல்லியல் ஆர்வலர்களை கௌரவிக்கும் முகமாக யாழ். கலாசார உத்தியோகத்தரும் மரபுரிமை செயற்பாட்டாளருமான மார்க்கண்டு அருட்சந்திரன், விடுதி உரிமையாளரும் தன்னார்வ மரபுரிமை செயற்பாட்டாளருமான அஜந்தா சுப்பிரமணியம், மரபுரிமை தன்னார்வலரும் மெட்டா நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளருமான பாலயோகஸ்தினி சிவயோகநாதன் ஆகியோர் யாழ். மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், நகர அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பதிகாரி கவிதா, யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறைத் தலைவர் சர்வேஸ்வரா ஐயர் பத்மநாதன், யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை தலைவர் சாந்தினி அருளானந்தன், தொல்லியல் திணைக்கள உதவி பணிப்பாளர் பந்துலஜீவ, மத்திய கலாசார நிதியத்தின் செயற்றிட்ட முகாமையாளர் தர்மகீர்த்தி, வட மாகாண சுற்றுலா பணியக பணிப்பாளர் யசோதரா, யாழ். பல்கலைக்கழக கலாசார சுற்றுலாத்துறை மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments