இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பதிவில், திரைப்படத்தை தாமதமாக பார்த்திருந்தாலும் அது பெரும் மனநிறைவை அளித்ததாக தெரிவித்துள்ளார்.
மனிதர்களின் கதைகள், அவர்களின் அழுகை, ஆசைகள், கனவுகள், துரோகங்கள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளிட்ட உணர்வுகளை அப்பட்டமாக பதிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திரைப்படத்தை உருவாக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துகளையும் அன்பையும் தெரிவித்துள்ளார்.
‘டோரதி’ திரைப்படம் மதுரை கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ளதுடன், ஆண்மை, நட்பு, பாலின அடையாளம், வன்முறை மற்றும் சமூக ஏற்பு உள்ளிட்ட விடயங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த திரைப்படம், சர்வதேச பார்வையாளர்களிடையே பாராட்டைப் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் இத்திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ‘டோரதி’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


