தமிழ் மொழியில் பொது வெளியில் எழுதும் எழுத்தாளர்கள், பேசும் பேச்சாளர்கள் மற்றும் யூரியூப் ஊடகர்கள் வெளியிடும் சில கருத்துகள், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பரப்பப்படுவதால், நாட்டில் இனவாத மற்றும் சிங்கள–பௌத்த மத அரசியல் மீண்டும் தலைதூக்குவதற்குக் காரணமாக அமைகின்றன என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியில் இருந்துகொண்டே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நிம்மதியாக ஆட்சி செய்ய விடுமாறு தாம் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குற்றம் புரிந்த ஞானசார தேரரைச் சிறையில் அடைத்தது தவறு என தற்போது எவரும் கூறவில்லை. அவரது தேருடை தொடர்பான விவகாரமே பிரச்சினையாக உள்ளது. இதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தீர்வு காண வேண்டும்.
ஞானசார தேரரின் தேருடை தொடர்பில் பௌத்த மதத் தலைவர்களைச் சந்தித்துப் பேசி, இரண்டு வாரங்களுக்குள் தீர்வொன்றை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
பௌத்த மதத் தலைவர்களிடமிருந்து அவருக்கு ஏற்பட்ட அழுத்தத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நீறு பூத்த நெருப்பாக இருக்கும் இனவாதம் முழுமையாக மாறுவதற்குக் காலம் எடுக்கும். அதனைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தியதில் ‘அரகலய’ மக்கள் எழுச்சிக்கு முக்கிய பங்கு உண்டு.
சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிடும் தமிழ் மொழி எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்களிடம் ஒரு விடயத்தைக் கூற விரும்புகிறேன். பௌத்த மதத் தலைவர்கள் தொடர்பான விவகாரத்தில் ஜனாதிபதிக்கு உதவ வேண்டும் என விரும்பினால், மத அரசியல் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதற்கும் கவனம் செலுத்த வேண்டும்.
பொது வெளியில் வெளியிடப்படும் ‘அரோகரா’, ‘சபாஷ்’, ‘ஜயமேவா’ போன்ற கோஷங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் உடனடியாகச் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, சிங்கள சமூக ஊடகப் பரப்புகளில் பரப்பப்படுகின்றன. இவ்வாறான கருத்துகள் சிங்கள–பௌத்த மத அரசியல் மீண்டும் வலுப்பெறுவதற்குக் காரணமாக அமையக்கூடும்.
எனவே, தமிழ் பேசும் மக்கள் இந்த விவகாரம் தொடர்பில் அதிகமாகப் பேசுவதைத் தவிர்த்து, “எமது பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்குங்கள், ஜனாதிபதி அவர்களே!” எனக் கோரிக்கை விடுத்துவிட்டு அமைதியாக இருக்க வேண்டும்.
ஜனாதிபதியை நிம்மதியாக ஆட்சி செய்ய விடுங்கள் என எதிர்க்கட்சியில் இருந்துகொண்டே தாம் கூறுவதாக மனோ கணேசன் எம்.பி. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


