செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(13) பொதுமக்களால் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ் இனப்படுகொலைக்கான சான்றுப் பொருட்களான வெளிவந்துள்ள நிலையில் சர்வதேச நீதிகோரி ஒற்றுமையாக நாம் ஒன்றுபட்டு இங்கு கூடி கீழ்வரும் பிரகடனங்களை வெளியிட்டுள்ளனர்.
செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கான சர்வதேச நீதி விசாரணை பொறிமுறை வேண்டும்:
செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சியங்களாக வெளிவந்துள்ளன.
இந்த சான்றுப் பொருட்களானவை மேற்படி குற்றத்தை இழைத்த தரப்பான சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதானது, அவற்றை சேதப்படுத்தி குற்றங்களை நிரூபிக்க முடியாத சூழலை ஏற்படுத்தக்கூடிய கூடிய ஆபத்துள்ளது.
எனவே குற்றமிழைத்த தரப்பாக உள்ள இலங்கை அரசின் தலையீடுகள் எதுவும் அற்ற வகையில் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி, மன்னார் மனிதப் புதைகுழி உள்ளிட்ட அனைத்து புதைகுழிகளதும் அகழ்வாராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அதற்கான சர்வதேச தடய அறிவியல் நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து நிபுணர்களையும் நியமித்தல் அகழ்தெடுக்கப்படும் தடங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணைப் பொறிமுறையை முற்றாக நிராகரிப்பதுடன், சுயாதீனமான, பாரபட்சமற்ற சர்வதேச குற்றவியல் விசாரணை உடனடியாக ஆரம்பிக்கப்படல் வேண்டும்.
தமிழ் மக்கள் மீது இலங்கை அரசினால் இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள் தொடர்பாக சில அமைப்புக்களால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களும், ஆதாரங்களும், சர்வதேச குற்றவியில் விசாரணை ஒன்றுக்காக பாரப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதிகோரும் உள்ளகப் பொறிமுறைகளை நாம் முற்றாக நிராகரிப்பதுடன், அதற்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.
அரசியல் கைதிகளின் உடனடியான விடுதலை: பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தண்டனை அனுபவித்துவரும் அரசியல் கைதிகள் அனைவரும் உடன் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுடன் அமுலில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்படவும் வேண்டும்.
அத்துடன் சர்வதேச நியமங்களுக்கு அமைவானது என்னும் பெயரில் வேறு எந்தவொரு புதிய சட்டத்தையும் உருவாக்கக்கூடாது.


