கனேடிய இராணுவத்தின் வெடிமருந்துகள் மற்றும் ஆயுதக் கையிருப்புகளை நிர்வகிப்பதில் காணப்படும் மந்தமான நடைமுறைகள் காரணமாக, நாட்டின் பாதுகாப்பு மற்றும் நேட்டோ (NATO) கூட்டமைப்பின் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் கணக்காய்வாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.
கணக்காய்வாளர் நாயகம் கரன் ஹோகன் (Karen Hogan) வெளியிட்டுள்ள புதிய செயல்திறன் கணக்காய்வு அறிக்கையின்படி, தேசிய பாதுகாப்புத் துறை மற்றும் பொதுச் சேவைகள் மற்றும் கனேடிய கொள்முதல் துறை முதலானவை, ஆயுதக் கையிருப்புகளை உரிய முறையில் நிர்வகிக்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, பயிற்சி வெடிமருந்துகள் தேவைக்கு அதிகமாக இருப்பு வைக்கப்பட்டுள்ள அதேவேளையில், உண்மையான போர்க்களத்திற்குத் தேவையான தளவாடங்களைச் சேமிப்பதில் இடைவெளிகள் காணப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும் இராணுவப் பயிற்சிகள் மற்றும் செயல்முறைகளுக்காக வாங்கப்பட்ட வெடிமருந்துகளில் பாதி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் கணக்காய்வாளர் நாயகம் கரன் ஹோகன் (Karen Hogan) தெரிவித்துள்ளார்.
எஞ்சியவை முறையாகப் பயன்படுத்தப்படாமல் அல்லது கண்காணிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக, அவருடைய அறிக்கை தெரிவிக்கிறது.
இதேவேளை, உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் சொந்த வெடிமருந்து இருப்புக்கள் கிட்டத்தட்ட காலியாகும் நிலை ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.


