கனடாவின் எட்டோபிகோ (Etobicoke) பகுதியில் வீடுகளுக்கான நேரடி தபால் விநியோக சேவையை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி முதல் நிறுத்துவதற்கு கனடா தபால் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, M9V மற்றும் M9W ஆகிய அஞ்சல் குறியீடுகளைக் கொண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் இனிவரும் காலங்களில் தங்களுக்கான தபால்களை சமூக அஞ்சல் பெட்டிகளிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
நாடு முழுவதும் வீடுகளுக்கு நேரடியாகத் தபால் விநியோகிக்கப்படும் சுமார் நான்கு மில்லியன் முகவரிகளை சமூக அஞ்சல் பெட்டி முறைக்கு மாற்றும் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
ஏற்கனவே கனடிய மக்களில் சுமார் 80 சதவீதமானோர் சமூக அஞ்சல் பெட்டிகள் மூலமாகவே தங்களது தபால்களைப் பெற்றுக்கொள்வதாக கனடா தபால் நிறுவனத்தின் பேச்சாளர் ஜெனிவீவ் ஜோலி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, GTA பகுதியில் அடுத்தகட்டமாக டர்ஹாம் மற்றும் பீல் பிராந்தியங்களில் உள்ள அஜாக்ஸ், பிக்கரிங், மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் ஆகிய பகுதிகளில் 2027ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கனடா தபால் நிறுவனம் வழங்கிய கால அட்டவணையின்படி, Greater Toronto Area முழுவதும் இந்த மாற்றத்தை நிறைவு செய்வதற்கு சுமார் ஐந்து ஆண்டுகள் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2031ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் ஓரன்ஜ்வில், வடக்கு யோர்க் பகுதிகளின் சில இடங்கள் மற்றும் டொராண்டோ நகர மத்திய பகுதியின் பெரும்பாலான இடங்களில் இந்த மாற்றம் இறுதியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தேசிய திட்டமிடல், செயல்பாட்டுத் தேவைகள் மற்றும் தளவாட ஏற்பாடுகளைக் கருத்திற்கொண்டே இந்த மாற்றத்திற்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக கனடா தபால் நிறுவனம் தெரிவித்துள்ளது.


