நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் தனுஷுடன் மலையாள நடிகர் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் மற்றும் நசீருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ஒக்டோபர் 15ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், ‘ஓம்’ திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினிகாந்த் மீது தங்களுக்கு இருக்கும் மிகுந்த மரியாதையின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படமும் தீபாவளி வெளியீடாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டும் தீபாவளிக்கு ‘ஓம்’ திரைப்படம் வெளியாகாது என தனுஷ் தெரிவித்துள்ளார்.
திரையுலகின் ஒட்டுமொத்த நலனை கருத்தில் கொண்டு, பெரிய திரைப்படங்கள் பரஸ்பர புரிதலுடனும் ஒருவருக்கொருவர் முடிவுகளை மதித்தும் செயல்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘ஓம்’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.


