இந்திய உயர் நீதிமன்றத்தின் கருத்தை வரவேற்பதாகத் தெரிவித்த கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கச்சதீவு யாருக்குச் சொந்தமானது என்ற விவாதம் இந்தியத் தேர்தல் காலங்களில் முக்கிய பேசுபொருளாக மாறி வருவதாகவும், அதேவேளை இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதும், அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவது தொடர்பில் இந்திய உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய மத்திய அரசுக்கு உண்மை நிலையை எடுத்துரைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கை கடற்பரப்பில் மீன்வளம் அதிகமாக இருப்பதாலும், இந்திய கடற்பரப்பில் மீன்வளம் குறைந்திருப்பதாலும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதாகக் கூறப்படும் நிலையில், இவ்வாறு எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவது சட்டவிரோதமானது என இந்திய உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி நுழைந்த சுமார் 2,936 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து 510 விசைப்படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 390 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 46 விசைப்படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அவற்றில் 22 விசைப்படகுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே, இந்திய மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் தமது மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி நுழைவது சட்டவிரோதமானது என்பதையும், அவ்வாறு நுழைந்தால் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவார்கள் என்பதையும் தமது மீனவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மேலும் தெரிவித்துள்ளார்.


