இலங்கையின் மிக வயதான உயிருடன் வாழும் ஆண் எனக் கருதப்படும் கரந்தெனிய, அங்குலுகல்ல பகுதியைச் சேர்ந்த பி.எச்.மெனியல் தனது 111ஆவது வயதை எட்டியுள்ளதாக முதியோர் தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.
1915ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் திகதி பிறந்த மெனியல், தனது முதிர்ந்த வயதிலும் சிறந்த மனநலத்துடன் இருப்பதுடன், தெளிவான நினைவாற்றலையும் சுற்றுப்புறச் சூழல் குறித்த விழிப்புணர்வையும் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியோர் தேசிய செயலகத்தின் தகவலின்படி, குடும்பத்தினரின் பராமரிப்பு மற்றும் ஆதரவுடன் அவர் மகிழ்ச்சியாகவும் மனச் சுறுசுறுப்புடனும் வாழ்ந்து வருகின்றார்.
ஒன்பது பிள்ளைகளின் தந்தையான இவருக்கு ஐந்து ஆண் பிள்ளைகளும் நான்கு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
அவரது மூத்த பிள்ளை உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய எட்டுப் பிள்ளைகளும் தற்போது உயிருடன் ஆரோக்கியமாக உள்ளனர்.
மேலும், அவருக்கு 92 பேரப்பிள்ளைகளும் 12 பூட்டப்பிள்ளைகளும் உள்ளனர்.
அவரது நலனை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான பராமரிப்பு, வசதிகள் மற்றும் சமூகத் தொடர்புகளைப் பேணுவதற்கான வாய்ப்புகளை அவரது பிள்ளைகள் அனைவரும் இணைந்து வழங்கி வருவதாக முதியோர் தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையின் மிக வயதான உயிருடன் வாழும் ஆண் என்ற வகையில் அவரைக் கௌரவித்து அங்கீகரிப்பதற்காக முதியோர் தேசிய செயலகம் மற்றும் கரந்தெனிய பிரதேச செயலக அதிகாரிகள் அவரது இல்லத்திற்குச் சென்றுள்ளனர்.


