கியூபெக்கின் மதச்சார்பின்மைச் சட்டமான பில் 21 தொடர்பில், கனேடிய உச்சநீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.
கனடா நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை காலை 9.45 மணிக்கு தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.
2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பில் 21 சட்டம், ஆசிரியர்கள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட சில அரசுப் பணியாளர்கள் பணியின்போது ஹிஜாப், தலைப்பாகை, கிப்பா போன்ற மத அடையாளங்களை அணிவதைத் தடை செய்கிறது.
இந்தச் சட்டம் மதச் சுதந்திரத்தையும் சமத்துவ உரிமைகளையும் பாதிப்பதாகக் கூறி பல அமைப்புகள் சட்டரீதியான சவால்களை முன்வைத்துள்ளன.
குறிப்பாக, அரசியலமைப்பின் 33ஆவது பிரிவான ‘Notwithstanding Clause’ என்பதைப் பயன்படுத்தி, மாகாண அரசாங்கங்கள் அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்டச் சவால்களை எவ்வளவு தூரம் தடுக்க முடியும் என்பதையும் உச்சநீதிமன்றம் ஆராயவுள்ளது.
இந்த வழக்கில் 61 தரப்புகள் பங்கேற்றுள்ளதுடன், அவற்றில் 51 தரப்புகள் இடையீட்டாளர்களாகக் கலந்துகொண்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் நான்கு நாட்கள் விசாரணை நடைபெற்றது.
இந்தத் தீர்ப்பு பில் 21 சட்டத்தின் எதிர்காலத்தை மட்டுமன்றி, கனடாவின் ஏனைய மாகாணங்கள் அரசியலமைப்பின் 33ஆவது பிரிவைப் பயன்படுத்தும் முறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
தற்போதைய நிலவரப்படி, தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை. இன்று வெளியாகவுள்ள உச்சநீதிமன்றத்தின் முடிவை கியூபெக் மாகாணம் மட்டுமன்றி, நாடு முழுவதும் பல தரப்பினர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


