கியூபெக் மாகாணத்தின் மதச்சார்பின்மைச் சட்டமான ‘பில் 21’ தொடர்பாக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த தீர்ப்பை, நாட்டின் உச்ச நீதிமன்றம் எதிர்வரும் 27ஆம் திகதி வழங்கவுள்ளது.
கியூபெக் அரசாங்கம் அரசியலமைப்பின் ‘நொட்-வித்ஸ்டாண்டிங்’ எனப்படும் விதிவிலக்குச் சரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தியமை தொடர்பாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரப் பதவிகளில் உள்ள சில அரச ஊழியர்கள் மத அடையாளங்களை அணிவதற்குத் தடை விதிக்கும் வகையிலும், அரச சேவைகளை வழங்குவோர் அல்லது பெறுவோர் தமது முகத்தைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும் வகையிலும் 2019ஆம் ஆண்டில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அன்றைய பிரான்சுவா லெகோ (François Legault) தலைமையிலான ‘கோலிஷன் அவெனிர் கியூபெக்’ (CAQ) அரசாங்கம், கியூபெக்கில் நீண்டகாலமாக நிலவி வந்த ‘நியாயமான அனுசரிப்புகள்’ (reasonable accommodations) தொடர்பான விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
கனடா அரசியலமைப்புச் சாசனத்தின் உரிமைகள் பட்டியலிலிருந்து இந்தச் சட்டத்தை விலக்கிப் பாதுகாப்பதற்காக, முன்னாள் அரசாங்கம் ‘நொட்வித்ஸ்டாண்டிங்’ சரத்தைப் பயன்படுத்தியது.
இந்தச் சட்டம் தொடர்பான சவால்களுக்கு எதிராக 2024ஆம் ஆண்டு பெப்ரவரியில் கியூபெக் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ‘பில் 21’ சட்டத்தை உறுதி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம், முன்னெச்சரிக்கையாக ‘நொத்வித்ஸ்டாண்டிங்’ சரத்தைப் பயன்படுத்துவதற்குக் கியூபெக்கிற்கு உரிமை உள்ளதெனத் தெரிவித்தது.
எனினும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமது கடமைகளை நிறைவேற்றும்போது தமது முகத்தை வெளிப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்ற சட்டப் பிரிவை மட்டும் அது செயலிழக்கச் செய்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, ஏனைய மாகாணங்கள் அரசியலமைப்பின் இந்த விதிவிலக்குச் சரத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது


