Saturday, November 7, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்பக்தி, மிரட்டல், பிரமாண்டம்… ரசிகர்களைக் கவர்கிறதா ‘மூக்குத்தி அம்மன் 2’? – திரை விமர்சனம்!

பக்தி, மிரட்டல், பிரமாண்டம்… ரசிகர்களைக் கவர்கிறதா ‘மூக்குத்தி அம்மன் 2’? – திரை விமர்சனம்!

நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் பக்தி, நகைச்சுவை, அமானுஷ்யம் மற்றும் பிரமாண்டமான காட்சிகள் எனப் பல அம்சங்களுடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உருவாகியுள்ளது.

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கதை

பெண் பொலிஸ் அதிகாரியாகப் பணியாற்றும் நயன்தாராவுக்கு அடிக்கடி விசித்திரமான கனவுகள் வருகின்றன. அந்தக் கனவுகளில் தோன்றும் அரக்கர்கள், மயிலாஞ்சி என்ற ஊருக்கு வருமாறு அவரை அழைக்கின்றனர்.

இதனால் குழப்பமடையும் அவர், விருப்பப் பணியிட மாற்றத்தைப் பெற்றுக்கொண்டு தனது தாயான ஊர்வசியுடன் அந்த ஊருக்குச் செல்கிறார்.

அங்கு நயன்தாராவின் வருகையை அறிந்த ரெஜினா கசாண்ட்ரா, அவரைப் பழிவாங்குவதுடன் பலிகொடுக்கவும் திட்டமிடுகிறார்.

தீய சக்திகள் நயன்தாராவை நெருங்கும் ஒவ்வொரு தருணத்திலும் அவருக்குள் விசித்திரமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரு கட்டத்தில் அவர் யார் என்ற உண்மை வெளிப்படத் தொடங்குகிறது.

இதனுடன் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்களும் கதையில் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஊர் மக்களைக் காப்பாற்ற மூக்குத்தி அம்மன் மீண்டும் அவதாரம் எடுத்திருப்பது தெரியவருகிறது. ஆனால், தனது உண்மையான அடையாளத்தை அறியாத நயன்தாராவை ரெஜினா ஏன் கொலை செய்யத் துடிக்கிறார்? அவரது பழிவாங்கும் திட்டம் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்களின் நடிப்பு

பெண் பொலிஸ் அதிகாரியாக அப்பாவித்தனமும் இயல்பான தோற்றமும் கொண்டு வலம் வரும் நயன்தாரா, அம்மனாக அவதாரம் எடுக்கும் காட்சிகளில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, சூலம் ஏந்தி கம்பீரமாக நிற்கும் காட்சிகளும், தீய சக்திகளுக்கு எதிராகப் போராடும் தருணங்களும் ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.

ரெஜினா கசாண்ட்ரா வில்லத்தனமான பார்வை, உடல்மொழி மற்றும் ஆவேசமான நடிப்பின் மூலம் படத்தின் முக்கிய பலமாகத் திகழ்கிறார்.

ஊர்வசி தனது வழக்கமான நகைச்சுவையால் சிரிக்க வைக்கிறார். யோகி பாபுவின் காட்சிகளும் படத்தின் கலகலப்புக்கு வலுச்சேர்க்கின்றன.

மேலும், இனியா, துனியா விஜய், சிங்கம் புலி, சுனில், மைனா நந்தினி, வர்ஷினி, நிதின் சத்யா உள்ளிட்டோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர்.

சிறப்புத் தோற்றத்தில் வரும் குஷ்பு மற்றும் சினேகா ஆகியோரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றனர்.

தொழில்நுட்ப அம்சங்கள்

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்தின் பிரமாண்டத்துக்கு மேலும் மெருகூட்டியுள்ளது.

ஹிப் ஹாப் தமிழாவின் இசையும் பின்னணி இசையும் கதையின் நகர்வுக்கு உறுதுணையாக அமைந்துள்ளன.

குறிப்பாக, கிராபிக்ஸ் காட்சிகள் படத்தின் முக்கிய பலமாக உள்ளன. அமானுஷ்யக் காட்சிகள், அம்மனின் சக்தியை வெளிப்படுத்தும் தருணங்கள் மற்றும் சண்டைக் காட்சிகளில் தொழில்நுட்பக் குழுவினரின் உழைப்பு வெளிப்படுகிறது.

முதல் பாதியில் மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்வதும், நயன்தாராவின் உண்மையான அடையாளத்தை நோக்கிக் கதை நகர்வதும் சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றன.

முதல் பாகத்தின் கதைக்களத்தையும் பாணியையும் அப்படியே தொடராமல், இரண்டாம் பாகத்தை முற்றிலும் மாறுபட்ட களத்தில் உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுந்தர்.சி.

மொத்தத்தில்…

நயன்தாராவின் அம்மன் அவதாரம், ரெஜினாவின் வில்லத்தனம், ஊர்வசியின் நகைச்சுவை மற்றும் பிரமாண்டமான தொழில்நுட்பக் காட்சிகள் எனப் பல அம்சங்கள் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.

பக்தி, அமானுஷ்யம், நகைச்சுவை மற்றும் பிரமாண்டம் ஆகியவற்றின் கலவையாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறது ‘மூக்குத்தி அம்மன் 2’.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments