தனிநபர் ஒருவரை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அரசமைப்பு மற்றும் நீதித்துறை அமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதித்துறை அதிகாரத்தை மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
குற்றவியல் தொடர்பில் முதல்நிலை நீதித்துறை அதிகாரம் கொண்ட மாகாண மேல் நீதிமன்றங்கள் மற்றும் சிவில் மேன்முறையீட்டு அதிகாரம் கொண்ட சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அதிகளவிலான வழக்குகளைத் தாமதமின்றித் தீர்ப்பதற்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டியுள்ளது.
நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் மாகாண மட்டத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நடைமுறைப்படுத்துதல் போன்ற காரணங்களால், அந்நீதிமன்றங்களுக்கு அனுபவமிக்க மற்றும் புலமைமிக்க நீதியரசர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே நீதியரசர்களின் தற்போதைய சட்ட ரீதியான ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கமையவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.” – என்றார்.
…………………………


