நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (13) இடம்பெற்ற வீதி விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரிந்த, ஹபரணை, அனுராதபுரம், மதவாச்சி மற்றும் ஹக்மனை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
ஹபரணை–கந்தளாய் வீதியில் கார் ஒன்று லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேபோல், கிரிந்த–திஸ்ஸமஹாராம வீதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம்–ரம்பேவ வீதியில் பஸ்ஸை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் பஸ்ஸுடன் மோதியதில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துக்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.


