அமெரிக்க இராணுவத்தின் சைபர் கமாண்ட் வீரர்களுக்கான ஊக்கத்தொகையில் ஆண்டுக்கு 12,000 டொலர் (மாதம் 1,000 டொலர்) வரை குறைப்பதற்கு பென்டகன் திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, இராணுவ வீரர்களிடையே கடுமையான எதிர்ப்பையும் அதிருப்தியையும் கிளப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் எதிரி நாடுகளின் கணினி அமைப்புகளை ஹேக் செய்யவும், நாட்டின் முக்கிய பாதுகாப்பு நெட்வொர்க்குகளைப் பாதுகாக்கவும் சைபர் கமாண்ட் வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரானுடனான மோதல், சர்வதேச பதற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அச்சுறுத்தல்களால் பணிச்சுமை அதிரித்துள்ள இவ்வேளையில் பென்டகன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கொண்டுவந்துள்ள ‘சைபர்காம் 2.0’ திட்டத்தின்படி, அடிப்படை நிலை ஆய்வாளர்கள் மற்றும் ஆபரேட்டர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை 1,000 டொலரில் இருந்து முற்றிலும் இரத்து செய்யப்படும் அல்லது குறைக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், மிக உயரிய பயிற்சி பெற்ற விரல் விட்டு எண்ணக்கூடிய ‘மாஸ்டர்’ நிலை வல்லுநர்களுக்கு மாதம் 3,500 டொலர் வரை ஊதியம் உயர்த்தப்பட உள்ளது.
திறமை மற்றும் தொழில்நுட்ப மேன்மைக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் நியாயப்படுத்தினாலும், சுமார் 6,000 பணியாளர்கள் கொண்ட சைபர் கமாண்டில் பெரும்பான்மையான அடிப்படை நிலை ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படுவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


