21வது ஆசிய விளையாட்டுப் போட்டியை 2030ஆம் ஆண்டு கட்டார் நாட்டின் டோஹாவில் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ கொடி ஒப்படைப்பு நிகழ்வு நேற்று(04) நடைபெற்றது.
கட்டார் சார்பாக ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் சாம்பியன் முதாஸ் எஸ்ஸா பார்ஷிம் இக்கொடியைப் பெருமையுடன் பெற்றுக்கொண்டார்.
இதன் மூலம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டோஹாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் கடந்த 16 நாட்களாக நடைபெற்ற 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்த நிலையிலே, அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் கத்தாரிடம் ஆசிய விளையாட்டுக் கூட்டமைப்புக் கொடி ஒப்படைக்கப்பட்டது.
ஆசிய கண்டத்தின் விளையாட்டுத் திருவிழாவான 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், நேற்று(04) பலோமா மிசுஹோ தடகள மைதானத்தில் நடைபெற்ற நிறைவு விழாவுடன் நிறைவடைந்தது.
லேசர் ஒளி வெள்ளம், பார்கூர் கலைஞர்களின் சாகசங்கள் மற்றும் வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் மைதானம் விழாக்கோலம் பூண்டது.
ஆசிய நாடுகளின் வீரர், வீராங்கனைகளும் கலந்து கொண்டு ‘ஒரே ஆசியா’ என்ற உணர்வுடன் வலம் வந்து ரசிகர்களுக்கு விடைகொடுத்தனர்.


