சவூதி அரேபியாவில் பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள விமான நிலையங்களை இலக்காகக் கொண்டு அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள அமைச்சு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
அத்துடன், சவூதி அரேபிய அரசாங்கத்துடனும் மக்களுடனும் இலங்கை தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்காக அனைத்துத் தரப்பினரும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடித்து, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கா – ஈரான் மோதலால் தீவிரமடைந்துள்ள பிராந்தியப் போரின் ஒரு பகுதியாக, ஏமனின் ஹூதி குழு சவூதி அரேபியா மீதான ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வியாழக்கிழமை ரியாத் விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூவர் உயிரிழந்ததாக சவூதி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதல்களில் பலர் காயமடைந்ததுடன், சவூதியா எயார்லைன்ஸ் விமானம் ஒன்றும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், விமான நிலையப் பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு பல விமான நிறுவனங்கள் சவூதி தலைநகர் ரியாத்துக்கான விமான சேவைகளை இரத்து செய்துள்ளன.
உலகளாவிய எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கவுள்ள முக்கிய கூட்டம் நடைபெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னதாக இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, ரியாத் விமான நிலையத்தை நோக்கி இரண்டு பொலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஏமனின் ஹூதி குழு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.


