Friday, October 30, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கூடுதல் குப்பைக் கிடங்குகளை உருவாக்க ஒன்ராறியோ அரசு திட்டம்!

கூடுதல் குப்பைக் கிடங்குகளை உருவாக்க ஒன்ராறியோ அரசு திட்டம்!

ஒன்ராறியோ மாகாணத்தில் குப்பைக் கிடங்குகளில் இடம் குறைந்து வரும் நிலையில், கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பொருட்டு அதிகளவில் குப்பைகளை எரிக்கவும், புதிய குப்பைக் கிடங்குகளை உருவாக்கவும் எதிர்பார்ப்பதாக மாகாண சுற்றாடல் அமைச்சர் தொட் மெக்கார்த்தி (Todd McCarthy) தெரிவித்துள்ளார்.

கனடியக் கழிவுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் விதித்த 50 சதவீத வரியை எதிர்கொள்ளும் ஒரு வழியாகவும் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த வரி விதிப்பால் ஒன்ராறியோவின் குப்பைக் கிடங்குகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் முழுமையாக நிரம்பக்கூடும் என்றும், அவ்வாறு இல்லையெனில் 10 ஆண்டுகளுக்குள் நிரம்பிவிடும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

புதிய குப்பைக் கிடங்குகள் மற்றும் கழிவுகளை எரிக்கும் மையங்களுக்கான அனுமதி வழங்கும் நடைமுறைகளை விரைவுபடுத்தும் வகையில் ‘Building Ontario Faster Act’ என்ற சட்டமூலத்தை மாகாண அரசு தாக்கல் செய்துள்ளது.

உள்ளூராட்சி மன்றங்கள் இத்தகைய திட்டங்களை விரும்பாவிட்டால் நிராகரிக்கலாம் என அமைச்சர் கூறினாலும், குப்பைக் கிடங்குகளுக்கு உள்ளூராட்சி மன்றங்களின் ஆதரவு கட்டாயம் என்ற பிரிவை ரத்து செய்ய இந்தச் சட்டமூலம் வழிவகை செய்கிறது.

கடந்த 20 ஆண்டுகளாக ஒன்ராறியோவில் புதிய குப்பைக் கிடங்குகள் எதுவும் உருவாக்கப்படவில்லை என்றும், கழிவுகளை எரிப்பது சுத்தமான ஆற்றலை உருவாக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பிராம்ப்டனில் உள்ள எமரால்ட் எனர்ஜி மற்றும் கிளாரிங்டனில் உள்ள டர்ஹாம்-யார்க் எனர்ஜி மையம் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு கிரீன் கட்சியின் தலைவர் மைக் ஷ்ரைனர் (Mike Schreiner) எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

கழிவுகளை எரிப்பது நச்சு வாயுக்களை வெளியிடுவதுடன், அதிலிருந்து வரும் சாம்பலும் ஆபத்தானது என்றும், அதை மீண்டும் குப்பைக் கிடங்கிலேயே கொட்ட வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நச்சுப் புகையை விரும்பவில்லை என்றும், கழிவுகளின் அளவைக் குறைக்கும் நடவடிக்கைகளையே அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, அனைத்து நடவடிக்கைகளுக்கும் ட்ரம்பின் வரியைக் காரணியாகக் காட்டாமல், இத்திட்டம் குறித்து மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும் என இடைக்கால லிபரல் கட்சித் தலைவர் ஜோன் பிரேசர் (John Fraser) தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments