Tuesday, September 29, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கலை, பண்பாட்டு மரபுகளை பாதுகாப்போம்

கலை, பண்பாட்டு மரபுகளை பாதுகாப்போம்

வடமாகாண கலை விழா, எமது கலை மற்றும் பண்பாட்டு மரபுகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முக்கியமான நிகழ்வாக அமைந்துள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு மாகாண பண்பாட்டு விழா – 2026 இன்று (29.09.2026) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தின் பண்பாட்டு பல்வகைமையையும் பாரம்பரியக் கலை மரபுகளையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, யாழ்ப்பாணம் முற்றவெளி சுற்றுவட்டாரத்திலிருந்து ஆரம்பமான பண்பாட்டு பேரணியுடன் தொடங்கியது. பல்வேறு பாரம்பரியக் கலைநிகழ்வுகளை வெளிப்படுத்திய 32 பண்பாட்டு நடனக் குழுக்களும் 22 பண்பாட்டு ஊர்திகளும் விருந்தினர்களுடன் யாழ்ப்பாண நகர வீதிகளூடாக அணிவகுத்து திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை சென்றடைந்ததைத் தொடர்ந்து பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாகின.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த பல்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் மொழிகளைப் பின்பற்றும் மக்களின் பண்பாடுகளையும் கலை மரபுகளையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு பண்பாட்டு நடனங்கள் இடம்பெற்றதுடன், தத்தமது தனித்துவமான பண்பாடுகளைப் பாதுகாத்தவாறு வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து தமது கலை மரபுகளை வெளிப்படுத்தியமை நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைந்தது.

பண்பாட்டு விழாவின் ஒரு பகுதியாக நூல் வெளியீடு, கலைஞர்கள் கௌரவிப்பு மற்றும் பல்வேறு பண்பாட்டு நடன நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், கலைத்துறையைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பை மதிப்பளிக்கும் வகையில் விருதுகளும் கௌரவிப்புகளும் வழங்கப்பட்டன. இளம் கலைஞர்களின் பங்கேற்பும் நிகழ்வில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், கூட்டுறவுத்துறை பிரதியமைச்சரும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோர் பங்கேற்றனர். வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிறஞ்சன், பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப் பணிப்பாளர் திருமதி நி. தர்சினி உள்ளிட்ட அதிகாரிகள், கலைஞர்கள், கலைமன்றங்களின் பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments