ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதியதொரு கூட்டணியை உருவாக்குவதற்காக கனடா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்காக கனடாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் “இணை உறுப்பினராக” (Associate Member) மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடன் மொன்றியல் நகரில் நடைபெற்று வரும் உச்சி மாநாட்டில் அவர் இதனை அறிவித்தார்.
எனினும், இந்தத் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே சில உறுப்பு நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மொன்றியல் மாநாட்டில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லியென் (Ursula von der Leyen), ”அமெரிக்காவின் கணிக்க முடியாத மற்றும் தற்காப்புப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மத்தியில், ஐரோப்பாவும் கனடாவும் தங்களது பரஸ்பர சார்புநிலையைக் குறைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும், கனடாவுடன் இதற்கு முன்பு எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு மிக நெருக்கமான உறவை உருவாக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவு (AI) துறையை மேம்படுத்தும் நோக்கில் டொராண்டோவைச் சேர்ந்த ‘கோகியர்’ (Cohere) என்ற உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தில் 1.6 பில்லியன் டொலர் வரை முதலீடு செய்யவுள்ளதாகப் பிரதமர் மார்க் கார்னி அறிவித்தார்.
மேலும் பருவநிலை மாற்றம், எரிசக்தி, பாதுகாப்பு, ஆர்க்டிக் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் உக்ரைனுக்கான தொடர்ச்சியான ஆதரவு குறித்தும் இந்த உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.


