கனடாவின் கியூபெக் மாகாணத்தில் நடைபெற்ற நினைவேந்தல் தின நிகழ்வின்போது இடம்பெற்ற விமான விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து புதன்கிழமை காலை கியூபெக் மாகாணத்தின் பியூஸ் (Beauce) பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் 60 வயதுடைய ஆண் விமானி என கியூபெக் மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்றபோது விமானத்தில் விமானி மாத்திரமே இருந்ததாக பொலிஸ் பேச்சாளர் செர்ஜன்ட் ஒட்ரி-ஆன் பிலோடோ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உயிரிழந்தவர் 68 வயதுடைய டேனியல் பேரன்ட் (Daniel Parent) எனவும், அவர் உள்ளூர் விமானக் கழகமான Club Aéronautique de Beauce இன் உறுப்பினர் எனவும் Radio-Canada செய்தி வெளியிட்டுள்ளது.
கியூபெக் நகரத்திலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் தெற்கே அமைந்துள்ள Saint-Georges விமான நிலையத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நினைவேந்தல் தின நிகழ்வின் ஒரு பகுதியாக ஆறு விமானங்கள் இணைந்து ‘Missing Man Formation’ எனப்படும் நினைவஞ்சலி விமான அணிவகுப்பில் ஈடுபட்டிருந்தபோது, அவற்றில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானதாக நகர மேயர் மனோன் பூஜி (Manon Bougie) தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன


