கனடாவில் தன்னைத்தானே ‘கிரிப்டோ மன்னன்’ என அழைத்துக்கொண்ட ஏடன் பிளெட்டர்ஸ்கி (Aiden Pleterski), தாம் கடத்தப்பட்டு துப்பாக்கி மற்றும் கத்திகளால் சித்திரவதை செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கனடாவின் ரொறன்ரோவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடத்தல் வழக்கு விசாரணையின்போது, ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த அவர், கடத்தல்காரர்களால் துப்பாக்கியால் தாக்கப்பட்டதுடன், கத்திகள் மற்றும் லைட்டரைப் பயன்படுத்தி சித்திரவதை செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, தான் உயிரிழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இருந்ததாகவும், உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீதிமன்றத்தில் வழக்குத் தரப்பு தரப்பினரால் 13 விநாடிகள் கொண்ட காணொளி ஒன்று நடுவர் குழுவினருக்குக் காண்பிக்கப்பட்டுள்ளது.
அந்தக் காணொளியில், துப்பாக்கியுடன் ஒருவர் முன்னிலையில் முழங்காலிட்டு அமர்ந்திருக்கும் பிளெட்டர்ஸ்கி, தனது உயிரைக் காப்பாற்றுமாறு கெஞ்சும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
குறித்த நபர் மூன்றிலிருந்து எண்ணத் தொடங்கி, ஒன்றை அடைவதற்கு முன்னதாக பிளெட்டர்ஸ்கியின் தலைக்கு அருகில் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சியும் அதில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் சாட்சியமளித்த பிளெட்டர்ஸ்கி, துப்பாக்கிச் சூடு தன்னைத் தாக்கவில்லை என்றாலும், இடது காதில் தொடர்ந்து ஒலி கேட்டுக்கொண்டிருந்ததாகவும், துப்பாக்கிக் குண்டு தன்னைத் தாக்கியதா இல்லையா என்பதுகூட அப்போது தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மூவர் மீது கடத்தல் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டு
இந்தச் சம்பவம் தொடர்பில் அகில் ஹேவுட் (Akil Heywood), அல்பிரடோ பலடினோ (Alfredo Paladino) மற்றும் ரக்கீம் ஹென்றி (Rakeem Henry) ஆகிய மூவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாத ஆரம்பத்தில், தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பிளெட்டர்ஸ்கியைக் கடத்தி, பணம் பறிக்க முயன்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், பலடினோ மற்றும் ஹென்றி ஆகியோருக்கு எதிராகத் துப்பாக்கி தொடர்பான குற்றங்கள், கடுமையான தாக்குதல், ஆயுதத்தால் தாக்குதல் மற்றும் உடலுக்குக் காயம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும், மூவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து, தாம் குற்றமற்றவர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
30 மில்லியன் டொலருக்கும் அதிகமான மோசடி
27 வயதான பிளெட்டர்ஸ்கி, முதலீட்டாளர்களிடமிருந்து 30 மில்லியன் டொலருக்கும் அதிகமான பணத்தைப் பெற்று, அவர்களுக்காக கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபடுவதாகக் கூறி மோசடி செய்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார். எனினும், அவருக்கான தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில், அகில் ஹேவுட் தன்னிடம் 300,000 முதல் 400,000 டொலர் வரை முதலீடு செய்திருந்ததாகவும், 2022ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அந்தப் பணத்தைத் திருப்பித் தருமாறு குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் மிரட்டத் தொடங்கியதாகவும் பிளெட்டர்ஸ்கி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது திவால் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐந்து கடன்வழங்குநர் பிரதிநிதிகளில் ஹேவுட்டும் ஒருவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடத்தல் சம்பவம் நடந்தது எப்படி?
கடத்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர், ‘ஸ்லைம்’ (Slime) என அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவரைச் சந்தித்ததாகப் பிளெட்டர்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கிரிப்டோகரன்சியைப் பணமாக மாற்றுவதற்கு உதவி தேவைப்படுவதாகக் கூறிய அந்த நபர், பின்னர் ரொறன்ரோவில் உள்ள ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் சந்திப்பொன்றையும் ஏற்பாடு செய்துள்ளார்.
அந்தச் சந்திப்பில் ‘ஸ்லைம்’ உடன் மேலும் இருவர் வந்ததாகவும், அவர்களில் ஒருவரை பின்னர் ஹென்றி என அடையாளம் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 2022 டிசம்பர் 5ஆம் திகதி கிரிப்டோகரன்சி தொடர்பில் பேசுவதற்காகச் சந்திக்க வேண்டும் என ‘ஸ்லைம்’ குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இதன்போது, டொட்ஜ் ராம் (Dodge Ram) ரக வாகனத்தில் வந்த அவர், பிளெட்டர்ஸ்கியை வாகனத்தின் பின்புற இருக்கையில் ஏற்றிய பின்னர், அவருக்கு அருகில் அமர்ந்து துப்பாக்கியை வெளியே எடுத்ததாக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஹென்றி மறுபுறத்தில் அமர்ந்திருந்ததுடன், அவரிடமும் கைத்துப்பாக்கி இருந்ததாகவும், வாகனத்தை பலடினோ செலுத்தியதாகவும் பிளெட்டர்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


