ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதி திம்மராயப்பன், ஸ்ரீஷா. இந்த தம்பதிக்கு மகன் உள்ளான்.
இதனிடையே, திம்மராயப்பன் அப்பகுதியை சேர்ந்த முனிகண்ணப்பா என்பவரிடம் வடிக்கு ரூ. 80 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், வாங்கிய கடனை அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், திம்மராயப்பன் குடும்பத்துடன் அருகே உள்ள மற்றொரு கிராமத்திற்கு சென்று வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில், தனது மகனின் பள்ளி சான்றிதழை வாங்குவதற்காக ஸ்ரீஷா இன்று நாராயணபுரம் கிராமத்திற்கு வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த முனிகண்ணப்பா தனது கூட்டாளிகளுடன் சென்று ஸ்ரீஷாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கணவன் வாங்கிய ரூ. 80 ஆயிரம் பணத்தை வட்டியுடன் உடனடியாக தரும்படி மிரட்டியுள்ளார். பின்னர், அங்கிருந்த மரத்தில் ஸ்ரீஷாவை கட்டிவைத்து துன்புறுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் ஸ்ரீஷாவை மீட்டனர். மேலும், முனிகண்ணப்பா மற்றும் கூட்டாளிகளை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.


