Thursday, October 1, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கடற்றொழில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் ஏற்பட்ட மோதல் – பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

கடற்றொழில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் ஏற்பட்ட மோதல் – பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

கிளிநொச்சி – பூநகரி, கிராஞ்சி செந்தாரகை விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த 27.09.2026 அன்று நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியின் போது இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த இறுதிப் போட்டியில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.

குறித்த போட்டியின்போது இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட குழப்பநிலை பின்னர் கட்டுக்கடங்காத அளவுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி இரு தரப்பினரையும் கலைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மோதல் தீவிரமடைந்த நேரத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாக போட்டியை பார்வையிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண மட்டத்திலான குறித்த தொடரை உரிய அங்கீகாரம் இல்லாத குழுவிடம் ஒப்படைத்ததன் விளைவாகவே இவ்வாறான குழப்பநிலை ஏற்படுவதற்கு காரணம் என விளையாட்டு ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

போட்டி ஏற்பாடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் தொடர்பிலும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments