ஜனநாயக மக்கள் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு தலைமையகத்திற்குச் சென்று ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிராஞ்ச்சைச் சந்தித்து மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.
இந்தச் சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சியின் அழைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், தலதா அத்துகோரள, பிரேமநாத் சி. தொலவத்த, அசாத் சாலி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்,
அரசமைப்பின் 12(1) பிரிவின் கீழ் வரும் சமத்துவக் கோட்பாட்டுக்கு முரணாக, நீதிபதிகளுக்கும் சட்டத்தரணிகளுக்கும் பதவிக்காலத்தை நீடிக்க அரசு முனைகின்றது. நாட்டில் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்காது, வீணான குழப்பங்களை ஏற்படுத்துவதே அரசின் நோக்கமாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த கலாநிதி சுரேன் ராகவன்,
சம்பவம் நடந்து 10 நாள்கள் கடந்தும், இதுவரை இடைக்கால அறிக்கைகூட வெளியிடப்படவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்கள் போன்ற குறைந்தபட்ச பலப்பிரயோக முறைகளைக் கையாண்டிருக்க வேண்டும். இந்த வன்முறையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டனை வழங்கப்படாத நிலையில், இவர்களின் ‘வாழும் உரிமை’ பறிக்கப்பட்டுள்ளது. இது ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சட்டத்துக்குப் புறம்பானதாகும் என்று தெரிவித்தார்.


