Tuesday, October 6, 2026
spot_img
Homeபொது செய்திகள்வெளிச்சத்துக்கு வந்த 2,000 ஆண்டுகள் பழமையான தடயங்கள்

வெளிச்சத்துக்கு வந்த 2,000 ஆண்டுகள் பழமையான தடயங்கள்

சுவிட்சர்லாந்தில் நிலவிய கடுமையான வறட்சி மற்றும் வரலாறு காணாத வெப்பமான கோடைகாலத்தால், சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் ரோமப் பேரரசின் காலத்தில் செழித்திருந்த நகரத்தின் புதைந்திருந்த கட்டிடத் தடயங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில் அமைந்துள்ள Aventicum என்ற பண்டைய நகரைச் சுற்றியுள்ள வயல்களில் இந்த தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தற்போது Avenches என்ற சிறிய நகரமாக உள்ள இந்தப் பகுதி, ரோமன் காலத்தில் Roman Helvetiaவின் தலைநகராக விளங்கியதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடுமையான வறட்சியின்போது நிலத்துக்கு அடியில் புதைந்துள்ள கட்டிடங்களின் மேற்பகுதியில் வளரும் தாவரங்கள் குறைந்த அளவில் வளர்வதால், அவற்றின் வடிவங்கள் நிலத்தின் மீது வித்தியாசமான தடயங்களாகத் தோன்றுகின்றன.

இந்த “parch marks” எனப்படும் தடயங்களைக் கொண்டு தொல்லியல் ஆய்வாளர்கள் புதைந்திருந்த கட்டமைப்புகளை அடையாளம் கண்டுள்ளனர்.

வரலாற்று ஆர்வலர் ஒருவர் வழங்கிய தகவலைத் தொடர்ந்து, தொல்லியல் குழுவினர் ட்ரோன்களைப் பயன்படுத்தி ஜூன் முதல் ஓகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் தினசரி வான்வழிப் படங்களை எடுத்துள்ளனர்.

அவற்றில் இதுவரை அறியப்படாத ரோமன் கால குளியல் நிலையங்கள், வீடுகள், வீதிகள் மற்றும் கோயிலாக இருக்கக்கூடிய கட்டமைப்புகளின் தடயங்கள் தென்பட்டுள்ளன.

பல தடயங்கள் இதுவரை அகழ்வாராய்ச்சி செய்யப்படாத பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், பழைய ரோமன் நகரத்தின் வரைபடங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் புதிதாகத் திருத்தி வருகின்றனர்.

கடந்த 50 ஆண்டுகளில் இப்பகுதியில் கிடைத்த மிகச் செறிவான தொல்லியல் கண்டுபிடிப்புகள் இவை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் இலக்கு வைத்து அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ளவும் ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments