ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் விமானங்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களைத் தொடர்ந்து, பல விமானங்கள் இன்று (05) பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திட்டமிடப்படாத விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டுள்ளன.
டப்ளினில் இருந்து ரோம் நோக்கிப் பயணித்த ஏர் லிங்கஸ் (Aer Lingus) நிறுவனத்தின் EI402 விமானம், பாதுகாப்பு காரணங்களுக்காகத் திசைதிருப்பப்பட்டு, பாரிஸுக்கு மேற்கே சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எவ்ரியூ விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
அதேவேளை, பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம் போலந்தின் LOT விமான நிறுவனத்திற்குச் சொந்தமானது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹெல்சின்கியில் இருந்து பயணித்த பின்எயார் (Finnair) விமானம், இத்தாலிய விமானப்படையின் பாதுகாப்பு வழிகாட்டுதலுடன் ரோமில் திட்டமிட்டபடி தரையிறங்கியுள்ளது.
இதற்கிடையில், வெடிகுண்டு மிரட்டல்கள் காரணமாக மூன்று விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக பல்கேரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோபன்ஹேகன் மற்றும் மட்ரிட்டில் இருந்து பயணித்த இரண்டு விமானங்கள் சோபியா விமான நிலையத்திலும், லண்டனில் இருந்து வந்த மற்றொரு விமானம் ப்ளோவ்டிவ் விமான நிலையத்திலும் தரையிறக்கப்பட்டுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமையும் குறைந்தது ஏழு விமானங்களுக்கும் ஒரு பயணிகள் கப்பலுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால் ஐரோப்பாவின் பல விமான நிலையங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும், மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த மிரட்டல்களுக்குப் பின்னால் எந்த நாடும் இருப்பதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், ஐரோப்பிய அதிகாரிகள் ரஷ்யா மற்றும் ஈரான் மீது கலப்புத் தாக்குதல்கள் மற்றும் நாசவேலை நடவடிக்கைகள் தொடர்பாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதனை இரு நாடுகளும் மறுத்துள்ளன.
மேலும், இந்த வாரம் ஐரோப்பாவின் பல நாடுகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் குளிர்சாதனப் பெட்டிகளின் செயல்பாடுகளை அடையாளம் தெரியாத இணைய ஊடுருவலாளர்கள் முடக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போலியான வெடிகுண்டு மிரட்டல்களும் குறைந்த செலவில் மேற்கொள்ளக்கூடிய, பொறுப்பை மறுக்கக்கூடிய சீர்குலைவு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருக்கலாம் என சில நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


