Thursday, November 5, 2026
spot_img
Homeஉலக செய்திகள்அமெரிக்க தேர்தலுக்குப் பின்னரும் மாறாத கனடாவின் வர்த்தகக் கொள்கை!

அமெரிக்க தேர்தலுக்குப் பின்னரும் மாறாத கனடாவின் வர்த்தகக் கொள்கை!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி மாபெரும் வெற்றியடைந்த போதிலும், அமெரிக்காவுடனான கனடாவின் வர்த்தக மூலோபாயத்தில் தற்போதைக்கு எவ்வித மாற்றமும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய-அமெரிக்க வர்த்தகங்களுக்கான மத்திய அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகியவற்றின் கட்டுப்பாட்டையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பொருளாதாரக் கொள்கைகளுக்குக் கிடைத்த பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றது.

ஒட்டாவாவில் நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திற்கு முன்னதாக ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர் லெப்லாங்க், பிறநாடொன்றின் தேர்தல் முடிவுகள் குறித்துக் கனடியர்கள் கருத்துரைப்பது பொருத்தமானது அல்ல எனக் குறிப்பிட்டார். “அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்றுவதே தமது பொறுப்பாகும்” என்றும் அமைச்சர் லெப்லாங்க் கூறியுள்ளார்.

மேலும், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது அமைச்சரவையுடனேயே தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் இன்னமும் பதவியில் இருப்பதால் அவர்களுடனான உரையாடல்களே தொடரும் என்றும் கனேடிய-அமெரிக்க வர்த்தகங்களுக்கான மத்திய அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் தெரிவித்தார்.

மோட்டார் வாகனங்கள், உருக்கிரும்பு (Steel), அலுமினியம் மற்றும் மென்மை மரப் பொருட்கள் (Softwood) போன்ற கனடிய உற்பத்திப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான வரிகளைக் குறைக்கும் நோக்கில், கனடா நீண்டகாலமாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தமொன்றை எட்ட முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments