நடிகர் நெப்போலியன் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘அமெரிக்க ஆவி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
சென்னையில் உள்ள கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஜப்பான் துணைத் தூதர் டாக்கா ஹாசி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து படத்தின் இசையை வெளியிட, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார். படக்குழுவினருடன் தமிழ் திரையுலகப் பிரபலங்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்தத் திரைப்படத்தில் நெப்போலியனுடன் அமெரிக்காவில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட புதுமுக நடிகர்களும் நடித்துள்ளனர். ‘நேஷ் வில்’ பிரபு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைத்துள்ளார். வினு படத்தொகுப்புப் பணிகளையும், இந்து ராஜ்குமார் கலை இயக்கப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
நகைச்சுவை கலந்த திகில் மற்றும் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘அமெரிக்க ஆவி’ படத்தை, ஜீவன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தனுஷ் நெப்போலியன் மற்றும் குணால் நெப்போலியன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர் இப்படத்தை இயக்கியுள்ளார்.
முழுமையாக அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையுடன், இப்படத்தை விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
விழாவில் பேசிய நடிகர் நெப்போலியன், இப்படத்தில் நடித்துள்ள 200க்கும் மேற்பட்ட புதுமுகங்களில் பலர் பெரிய நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.
அவர்களுக்குக் கிடைக்கும் நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்தி, 75 நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும், அமெரிக்காவில் இதற்கு முன்னர் நேரடியாகத் திரைப்படப் படப்பிடிப்பைக் கூடப் பார்த்திராத பலர் இப்படத்தில் நடித்துள்ளதாகவும், அவர்களுக்குத் தானும் இயக்குநரும் பயிற்சியளித்து நடிக்க வைத்ததாகவும் தெரிவித்தார்.
சுமார் 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இப்படத்தில் நடித்துள்ளதாகக் குறிப்பிட்ட நெப்போலியன், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நடித்திருப்பது இப்படத்தின் தனிச்சிறப்பு என்றும், திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.


