டொராண்டோவில் நகைக்கடை கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய தப்பியோடிய காரொன்று மோதியதில் பலத்த கழுத்துக் காயமடைந்த பெண்ணொருவருக்கு, சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நகரசபையிடமிருந்து 40,000 அமெரிக்க டொலர் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நான்சி பக்மன் (Nancy Buckman) என்ற 68 வயதுடைய பெண், இந்தக் கட்டணம் தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2024 டிசம்பர் மாதம், டொராண்டோவின் ஃபேர்வியூ மால் (Fairview Mall) அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தொழில்முறை செவிலியராகப் பணியாற்றும் பக்மன், டான் மில்ஸ் வீதியிலிருந்து (Don Mills Road) ஃபேர்வியூ மால் டிரைவ் (Fairview Mall Drive) நோக்கி மஞ்சள் சமிக்ஞையில் இடதுபுறமாகத் தனது காரைத் திருப்பியபோது, அதிவேகமாக வந்த கார் ஒன்று அவரது வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இந்த மோதல் எதிர்பாராத விதமாக இடம்பெற்றதாகத் தெரிவித்த அவர், தனது பார்வைக்கு முன்னால் வேறு வாகனங்கள் எதுவும் இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தின் தாக்கத்தால் அவர் சுயநினைவை இழந்துள்ளார். பின்னர், அவரது வாகனத்தின் அடிப்பகுதியில் தீப்பற்றியிருப்பதைக் கவனித்த பொதுமக்களில் ஒருவர், அவரை வாகனத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியதையடுத்து அவர் சுயநினைவு திரும்பியுள்ளார்.
அப்போது, ஆய்வகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய மாதிரி ஒன்று தன்னிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். எனினும், அங்கிருந்த பெண் ஒருவர் அவரை வெளியே செல்ல அனுமதிக்காமல், பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
பின்னர், அங்கு நின்ற குடும்பமொன்றின் உதவியுடன் அவர் வேறொரு வாகனத்தில் பாதுகாப்பாக அமர்த்தப்பட்டு, அவசரகால மீட்புப் பிரிவினர் வரும்வரை காத்திருந்துள்ளார்.
இதனிடையே, அவரின் வாகனத்தில் மோதியவர்கள் ஃபேர்வியூ மாலில் இடம்பெற்ற நகைக்கடை கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனவும், விபத்துக்குப் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பக்மனின் 2021ஆம் ஆண்டு தயாரிப்பான சுபாரு ஃபோரஸ்டர் (Subaru Forester) கார் முற்றாகச் சேதமடைந்தது.
அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மார்புப் பகுதியில் காயங்களும் கடுமையான கழுத்துக் காயமும் ஏற்பட்டன. இதனால் தொடர்ச்சியான வலியை எதிர்கொள்வதுடன், வழக்கமான உடற்பயிற்சி சிகிச்சைகளையும் பெற்றுவருகிறார்.
வாகனத்திற்கான இழப்பீடு மற்றும் மேலதிக மதிப்பீட்டுக்குப் பின்னர் உடற்பயிற்சி சிகிச்சைக்கான செலவுகளை காப்புறுதி நிறுவனம் ஏற்றுக்கொண்டது.
எனினும், விபத்துக்குப் பின்னரான செலவுகள் அத்துடன் முடிவடையவில்லை. விபத்து இடம்பெற்று சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் டொராண்டோ நகரசபையிடமிருந்து 40,000 அமெரிக்க டொலர் கட்டணம் தொடர்பான அறிவிப்பு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


