டெங்கு காய்ச்சலினால் இந்த ஆண்டில் இதுவரை 39 பேர் மரணித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோயாளர்களின் மரண வீதம் 0.07 சதவீதமாகக் காணப்படுகின்றது.
நாடு முழுவதும் டெங்கு நோயார்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 810 ஆக பதிவாகியுள்ளது.
பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் மிக அதிகமாக 21 ஆயிரத்து 547 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
மே மாதத்தில் 8 ஆயிரத்து 590 பேரும், ஜனவரியில் 7 ஆயிரத்து 866 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஜூலை மாதத்தின் முதல் மூன்று நாள்களிலேயே 3 ஆயிரத்து 422 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருப்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகின்றது.
மாகாண ரீதியில் அவதானிக்கும் போது, மேல் மாகாணம் 30 ஆயிரத்து 876 நோயாளர்களுடன் (52.50%) மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக தென் மாகாணத்தில் 9 ஆயிரத்து 316 பேரும் (15.84%), சப்ரகமுவ மாகாணத்தில் 5 ஆயிரத்து 129 பேரும் (8.72%) இனங்காணப்பட்டுள்ளனர்.
மாவட்ட மட்டத்தில் கொழும்பில் 12 ஆயிரத்து 17 பேரும் (கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 2 ஆயிரத்து 514 பேர் உட்பட), கம்பஹாவில் 11 ஆயிரத்து 740 பேரும், மாத்தறையில் 4 ஆயிரத்து 262 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள 142 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு பரவும் அதி அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
டெங்கு பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும், நீர் தேங்கும் இடங்களை உடனடியாக அழித்து நுளம்புகள் பெருகுவதைக் கட்டுப்படுத்த முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் சுகாதாரத் துறையினர் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.


