அனுராதபுரம் – ரித்திகல, களு எலிய பகுதியில் கைவிடப்பட்ட கிணற்றில் சிக்கியிருந்த 15 ஆமைகள் மீட்கப்பட்டு, அருகிலுள்ள நீர்நிலையொன்றில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள், கைவிடப்பட்ட கிணற்றுக்குள் ஆமைகள் சிக்கியிருப்பதை அவதானித்து ரித்திகல வனவிலங்கு அலுவலகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனவிலங்கு அதிகாரிகள், கிணற்றுக்குள் சிக்கியிருந்த 15 ஆமைகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக, நீரைத் தேடி செல்லும் போது இந்த ஆமைகள் கிணற்றுக்குள் தவறி விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
மீட்கப்பட்ட ஆமைகள் பின்னர் நீர் ஆதாரம் காணப்படும் ரித்திகல, தெமட்டவெவ பகுதியில் உள்ள நீர்நிலையொன்றில் விடுவிக்கப்பட்டதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக காட்டு விலங்குகள் நீரைத் தேடி அடிக்கடி இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவை இயற்கையான ஆபத்துகளுக்கு மட்டுமன்றி, வேட்டையாட வைக்கப்படும் கண்ணிகள் மற்றும் பொறிகள் உள்ளிட்ட மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்களுக்கும் முகங்கொடுத்து வருவதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


