களுத்துறை – நாகொட பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த உணவக உரிமையாளரின் மனைவியும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
கடந்த 9-ஆம் திகதி காலை 7.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், குறித்த உணவகத்திற்கு முன்பாக வைத்து உரிமையாளர் மீதும் அவரது மனைவி மீதும் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இத் தாக்குதலின் போது உணவகத்தின் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி உடனடியாக நாகொட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரும் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த பெண் தொடங்கொட பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி நேற்று மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுத்துறை தெற்கு பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.


