Sunday, November 22, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் முதியவர்களை ஏமாற்றி கொள்ளையிட்டவர்கள்

கனடாவில் முதியவர்களை ஏமாற்றி கொள்ளையிட்டவர்கள்

கனடாவின் டொராண்டோ நகரில் முதியவர்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக இடம்பெற்ற நூதன நகைக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் குறித்த மேலதிக தகவல்களை டொராண்டோ காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதிக்கும் நவம்பர் 2 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குறித்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் முதியவர்களை அணுகி, அவர்களுடன் பேச்சுக் கொடுத்துக் கவனத்தைத் திசைதிருப்பியவாறு, அவர்கள் அணிந்திருந்த நகைகளைத் திருடியுள்ளனர்.

நகைகளை இலகுவாகக் கழற்ற முடியாத சில சந்தர்ப்பங்களில், சந்தேகநபர்கள் பலப்பிரயோகத்தைப் பயன்படுத்தி நகைகளைப் பறித்துச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம், கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்று அடையாளம் காணப்பட்டதுடன், நவம்பர் 3 ஆம் திகதி அவ்வாகனத்துடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதே தினத்தில், ‘பார்மசி அவென்யூ’ மற்றும் ‘செயின்ட் கிளேயர் அவென்யூ ஈஸ்ட்’ ஆகிய பகுதிகளுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது, மேலும் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது பெருமளவான தங்க நகைகளும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை டொராண்டோ காவல்துறையினர் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளனர்.

இதற்கமைய, அலெக்ஸ் ஸ்டோயன் (21), கிறிஸ்டினா மிக்லெஸ்கு (21), பெர்மொண்டோ-மெக்சிகானோ அலெக்ஸாண்ட்ரு (28), பீட்ரைஸ் டுட்டு (23), ரவுல் அலெக்ஸாண்ட்ரு (21), லுமினிடா பவுன் (40) மற்றும் அயன் ஸ்டோயன் (42) ஆகியோரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட எட்டாவது சந்தேகநபர் 17 வயதுடைய சிறுமி என்பதால், இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் அவரது அடையாளத்தை வெளியிட முடியாது எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட எட்டுப் பேருக்கும் எதிராக மொத்தமாக 32 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments