Friday, September 25, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் பரபரப்பான வழக்கு

கனடாவில் பரபரப்பான வழக்கு

கனடாவின் ஒன்ராறியோ, பிராண்ட்போர்ட் பகுதியில் 2005-ஆம் ஆண்டு பிறந்த ஆண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட வழக்கின் விசாரணையில், 21 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த தேடுதலுக்குப் பின்னர் அக்குழந்தையின் தாய் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது 39 வயதாகும் அந்தப் பெண், கடந்த பெப்ரவரி மாதம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த பெண் மீது, சடலத்தை அவமதித்தமை மற்றும் குழந்தையின் உடலை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், உடலை மறைத்த குற்றச்சாட்டை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

ஜூலை 28, 2005 அன்று பிராண்ட்போர்டில் உள்ள நடைபாதை பகுதிக்கு அருகில் மஞ்சள் நிறத் துண்டில் சுற்றப்பட்ட நிலையில் முழு வளர்ச்சியடைந்த ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அக்குழந்தைக்கு புலனாய்வாளர்கள் ‘பேபி பாக்கர்’ எனப் பெயரிட்டனர்.

பிரேதப் பரிசோதனையில் குழந்தையின் மண்டையோடிலும் தாடையிலும் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்ட போதிலும், உடல் அழுகிய நிலையில் இருந்ததால் மரணத்திற்கான சரியான காரணத்தையோ அல்லது குழந்தை பிறக்கும்போதே உயிரிழந்ததா என்பதையோ துல்லியமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

2023-ஆம் ஆண்டு டொராண்டோ பொலிஸாரின் மரபியல் விசாரணைப் பிரிவின் உதவியுடன், குழந்தையின் தந்தை யார் என்பது முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, 2025 ஜூன் மாதம் சந்தேகத்திற்குரிய பெண்ணின் வீட்டில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டிலைக் கைப்பற்றிய பொலிஸார், அதில் இருந்த டி.என்.ஏ மாதிரிகளைச் சோதித்து அவர் தான் தாய் என்பதை உறுதிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து 2026 பெப்ரவரி 26 அன்று அவர் கைது செய்யப்பட்டார். குழந்தை பிறந்தபோது தனக்கு 18 வயது எனவும், தான் கர்ப்பமாக இருந்ததே தனக்குத் தெரியாது எனவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

மேலும், சடலத்தை மறைத்தது தொடர்பாகத் தனக்கு எந்த நினைவும் இல்லை எனக் கூறிய அவர், நீதிமன்றத்தில் வழக்கறிஞரின் அருகில் நின்றவாறு கண்ணீருடன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி எலிசபெத் வில்சன், குற்றத்தை ஒப்புக்கொள்வதன் மூலமும் அவருக்குக் குற்றவியல் பதிவு ஏற்படும் என்பதை உறுதிப்படுத்தினார்.

இச்சம்பவம் தொடர்பான தண்டனை விவரங்கள் வழங்கும் நடைமுறை வரும் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments