கனடாவின் இந்த ஆண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டம் தொடர்பான திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்கும் நடவடிக்கையில் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் இன்று (6) பல்வேறு பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர்.
இதன்படி, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), மனிடோபா மாகாண முதல்வர் வப் கினியூவுடன் (Wab Kinew) இணைந்து வின்னிபெக் நகருக்குச் செல்லவுள்ளார்.
இதன்போது, வீடற்றோர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளிக்கவுள்ளார்.
அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் கனடாவில் வீடற்றோர் பிரச்சினைக்கு முடிவுகட்டுவதை இலக்காகக் கொண்டுள்ள கார்னி அரசாங்கம், இதற்காக அடுத்த ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு 11.2 பில்லியன் டொலர்களையும், பத்து ஆண்டுகளுக்கு மொத்தமாக 17.8 பில்லியன் டொலர்களையும் ஒதுக்க முன்மொழிந்துள்ளது.
இதேவேளை, நிதியமைச்சர் பிரான்சுவா-பிலிப் சம்பெயின் (François-Philippe Champagne), மொன்றியல் வெளிநாட்டு உறவுகள் பேரவை ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் கலந்துகொண்டு, மத்திய வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்களை எடுத்துரைக்கவுள்ளார்.
எனினும், கார்னி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள கனேடிய மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை என விமர்சித்துள்ளனர்.
முன்னதாக கார்னி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் சிறுபான்மை அரசாங்கத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது லிபரல் கட்சி பெரும்பான்மை ஆட்சியைப் பெற்றுள்ளது.
இதனால், ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெறாமலேயே தனது அரசாங்கத்தின் திட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கார்னி அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ளது.


