அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தனது கைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கையின் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின்படி, தனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு உதவுமாறு எந்தவொரு சந்தேகநபரையும் கட்டாயப்படுத்த முடியாது. சந்தேகநபர் ஒருவர் தனக்கு எதிரான விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டிய அவசியமில்லை என்பதுடன், அவர் விரும்பினால் மௌனமாக இருப்பதற்கான முழு உரிமை அவருக்கு உண்டு.
விசாரணை அதிகாரிகளோ அல்லது அரச பிரதிநிதிகளோ கடவுச்சொற்களை வழங்குமாறு சந்தேகநபர் மீது தேவையற்ற அழுத்தங்களையோ, அச்சுறுத்தல்களையோ அல்லது தூண்டுதல்களையோ பிரயோகிக்கக் கூடாது. அவ்வாறு செய்வது சட்டவிரோதமான செல்வாக்குச் செலுத்துகையாக மாறும். தற்போதைய அரச பிரதிநிதிகளின் பொதுவெளிக் கூற்றுகள் அத்தகைய அழுத்தங்களை உருவாக்குவதாக அமைந்துள்ளன.
சுரேஷ் சலே தனது 38 ஆண்டுகால புலனாய்வுத் துறை சேவையில் உருவாக்கிய மிக உணர்வுபூர்வமான மற்றும் இரகசியமான தகவல் மூலங்கள் தொடர்பான விவரங்கள் அந்த மின்னணு சாதனங்களில் இருக்கலாம். தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் ‘ஹனி ட்ராப்ஸ்’ உள்ளிட்ட பல்வேறு உத்திகள் மூலம் தகவல்களை வழங்கியவர்களின் விவரங்கள் இதில் அடங்கும். இந்தக் கடவுச்சொற்களை வெளிப்படுத்துவதன் மூலம், நாட்டின் பாதுகாப்புக்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைத்துத் தகவல் வழங்கியவர்களின் உயிருக்குக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும். – என்றார்.


