இந்தியா இராமநாதபுரம் உச்சிப்புளி அடுத்த நத்தை குளம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த நத்தகுளம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக க்யூ பிரிவு ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உச்சிப்புளி, களிமண்குண்டு, சல்லி தோப்பு, நத்த குளம் கடற்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் ரோந்துபணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வேளை கடலில் படகை நிறுத்தி ஒரு சிலர் சட்டவிரோதமான முறையில் பொருட்களை படகில் ஏற்றி வந்ததை கண்ட கியூ பிரிவு போலீசார் அவர்களை படகுடன் மடக்கி பிடிக்க முயன்ற போது கடலுக்குள் சென்று தப்பிய நிலையில் கரையில் நின்ற இருவரை போலீசார் பிடித்து கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அழகு சாதன பொருட்கள், உரம், பூச்சிக்கொல்லி அடங்கிய 38 சாக்கு மூட்டைகளை பறிமுதல் செய்து ராமநாதபுரம் க்யூ பிரிவு அலுவலகத்திற்கு எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்கு பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட இருவரையும் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் இந்திய மதிப்பு ரூபாய் 36 லட்சம் எனவும் இலங்கை மதிப்பு ஒரு கோடி ரூபாய் வரை இருக்கலாம் எனவும், தொடர்ந்து கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகி எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்


