ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதேசமயம், பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று ஓமனுடன் மோதுகிறது.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நாளை மறுதினம் துபாயில் மோதவுள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக பஹல்காம் தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்கு பிறகு, இரு அணிகள் முதல் முறையாக சந்திக்க இருப்பதால் போட்டி சிறப்புக் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் பேட்டியில் கூறியதாவது:
“இந்திய வீரர்கள் ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அரசியல் அல்லது பிற விஷயங்கள் காரணமாக கவனச்சிதறல் ஏற்படக்கூடாது. வீரர்கள் தங்களது வேலையை சரியாக செய்ய வேண்டும்; அரசாங்கம் தன் வேலையை பார்த்துக்கொள்ளும்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா மிகச் சிறப்பாக விளையாடியது. நமது அணிக்கு சிறந்த திறமைகள் உள்ளன. கோப்பையையும் நிச்சயமாக இந்தியா வெல்லும் என நம்புகிறேன்,” என்றார் கபில்தேவ்.


