தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம், குமரிக்கடல் மற்றும் நில நடுக்கோட்டு இந்தியப் பெருங்கடலில் நீடித்துக் கொண்டிருக்கும் காற்று சுழற்சியானது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் குமரி கடல் வழியாக அரபிக் கடல் நோக்கி நகர இருக்கின்றது.
இது எதிர்வரும் தீபாவளி தினத்தன்று (20.10.2025) அரபிக் கடலில் மேலும் வலுவடைந்து, அதன் பின்னர் தொடர்ச்சியாக மேற்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதே காலப்பகுதியில் அதாவது எதிர்வரும் தீபாவளி தினத்தில் மேலும் ஒரு புதிய நிகழ்வானது அதாவது புதிய காற்று சுழற்சி ஒன்று வங்காள விரிகுடா கடலில் அந்தமான் கடல் பகுதியில் உருவாக இருக்கின்றது.
இந்த காற்று சுழற்சியானது எதிர்வரும் அக்டோபர் 24ஆம் 25ஆம் திகதியளவில் தாழ்வுப் பகுதியாகி, தாழ்வு மண்டலமாகி அதன் பின்னர் புயலாக வலுவடைந்து தமிழ்நாட்டின் வட கடலோரம் மற்றும் தெற்கு ஆந்திரா கடல் பகுதிகளுக்கிடையில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அது மட்டுமல்லாது இந்த இரண்டாவது இடைப்பட்ட பருவப் பெயற்சி காலத்திலும், அதனை அடுத்த வருகின்ற வட கீழ் பருவப் பெயர்ச்சிக் காலப்பகுதிகளிலும் மேலும் சில தாழ்வு பகுதிகள், காற்று சுழற்சிகள் உருவாக இருக்கின்றன.
இதன் காரணத்தினால் நமக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் வரை அடிக்கடி மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதே வேளை ஆரம்பிக்க இருக்கும் இரண்டாவது இடைப்பட்ட பருவப் பெயர்ச்சிக் காலப்பகுதிகளிலும் வட கிழக்கு பருவப் பெயர்ச்சிக் காலப்பகுதியிலும் கிடைக்கின்ற மழை வீழ்ச்சியின் அளவானது வருடாந்த சராசரி மழை வீழ்ச்சியிலும் பார்க்க சற்று அதிகமாக இருக்கும் (above normal) என எமது வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


