ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஐக்கிய இராச்சியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையை மனித உரிமைகளுக்கான பிரித்தானிய உயர் ஆணையர் எலினோர் சாண்டர்ஸ் முன்வைத்துள்ளார்.
இலங்கைக்கு ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் விஜயம் செய்தமைக்கும், ஆணையர் வெளியிட்ட அறிக்கைக்கும் எலினோர் சாண்டர்ஸ் தனது அறிக்கையின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழிகள் குறித்த விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், சர்வதேச தரத்தின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரித்தானியா வலியுறுத்துகிறது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யத் தவறுவதன் மூலம் அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்த சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது குறித்தும் இந்த அறிக்கையில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
மோதல் தொடர்பான பாலியல் வன்முறையில் இனப் பாகுபாடு ஒழிப்புக்கான ஐ.நா அலுவலகத்தின் (ORAC) பணியை பிரித்தானியா ஊக்குவிப்பதுடன், இந்தப் பிரச்சினையை முன்னுரிமையாகக் கையாள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
இந்தப் பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கத்துடன் திறம்பட ஈடுபடுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பிரித்தானியா தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் முக்கிய குழுவும் நேற்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது.
ஐ.நா.வுக்கான பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி குமார் அய்யர் தொடர்புடைய அறிக்கையை வெளியிட்டார், மேலும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத்தின் வருகைக்கும் நன்றி தெரிவித்தார்.
மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நல்லாட்சி மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் ஆகியவற்றிற்கான அதன் உறுதிப்பாட்டை அர்த்தமுள்ள நடவடிக்கையாக மாற்ற இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு நேற்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் தொடங்கியது.
அமர்வில் பேசிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், நாட்டில் மனித உரிமை மீறல்களை விசாரிக்க முன்மொழியப்பட்ட எந்தவொரு வெளிப்புற தலையீடு அல்லது பொறிமுறையையும் இலங்கை நிராகரிப்பதாகக் கூறினார்.
இலங்கையில் கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக சுயாதீன விசேட சட்டவாதியின் பங்கேற்புடன் கூடிய பிரத்தியேக நீதிப்பொறிமுறை ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனீவாவில் ஆரம்பமானது.
இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தனது எழுத்துமூல அறிக்கையின் உள்ளடக்கத்தை மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டார்.
இதற்கமைய கடந்தகால மீறல்கள் மற்றும் வன்முறைகளாலும், தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கினாலும் உருவான காயங்களை ஆற்றுவதற்கும், அவற்றிலிருந்து மீள்வதற்கும் இலங்கைக்கு தற்போது வரலாற்று முக்கியத்தும் மிக்க வகையில் வாய்ப்பு கிட்டியிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அண்மையில் தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது முன்னெப்போதுமில்லாத வகையில் சீரான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக அரசாங்கம் வாக்குறுதியளித்ததாகவும், அவ்வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் அளித்து அவை உரியவாறு நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேபோன்று எதிர்வருங்காலங்களில் நாட்டில் நிலையான நல்லிணக்கத்தையும் அமைதியையும் கட்டியெழுப்புவதற்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதி நிலைநாட்டப்பட வேண்டியது அவசியம் என வோல்கர் டேர்க் குறிப்பிட்டார்.
இலங்கைக்கான விஜயத்தின் போது கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் துயரத்தையும், அத்துமீறல்களையும் அனுபவித்து வருவதாகவும், செம்மணி மனிதப்புதைகுழியைப் பார்வையிடச் சென்ற போது அங்கிருந்தவர்கள் தாம் முகங்கொடுத்துவரும் துன்பத்தைத் தன்னிடம் முறையிட்டதாகவும் தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி தெற்கைச்சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவருக்காக நீண்டகாலமாகக் காத்திருப்பதாகத் தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்ட அவர், எனவே தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் ‘பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரயோகம் உடன் இடைநிறுத்தப்பட வேண்டும். நிகழ்நிலைக் காப்புச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டம், அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான உத்தேச சட்ட வரைவு மற்றும் தனிநபர் தரவுப்பாதுகாப்பு தொடர்பான உத்தேச சட்ட வரைவு என்பன உள்ளடங்கலாக மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடிய சட்டங்கள் உரிய நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படவேண்டும்.
வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் காணி சுவீகரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இயங்கிவரும் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மீதான ஒடுக்குமுறைகளும், அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன. அவை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவரப்படவேண்டும். ” எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தினார்.
அதுமாத்திரமன்றி பாதுகாப்புத்துறை மறுசீரமைக்கப்படவேண்டும். வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கம் முடிவுக்குக்கொண்டுவரப்படுவதுடன் தனியாருக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படவேண்டும்.
மலையகத் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்’ என்றும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்தார்.
இந்தநிலையில், உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கரின் இலங்கை பற்றிய அறிக்கையில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
எட்டாயிரம் சொற்களுக்குள் “தமிழ்” என்ற சொல் வெறும் ஏழு முறை மட்டுமே இடம்பெற்றுள்ளது என்று மனிதவுரிமைகள் செயற்பாட்டாளர் நிஷா பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுவும் தமிழர்கள் தான் முதன்மையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர் குறிப்பிடவில்லை. பல ஆண்டுகளாக ஐ.நா.சபை நிறைவேற்றிய தீர்மானங்களும் தமிழர்களை பெயரிட்டு குறிப்பிடாமல், இலங்கை அரசாங்கங்களின் தூதரக வஞ்சகத்திற்கே இடமளித்துள்ளன.
இது நடுநிலை அல்ல, பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை அழிக்கும் கூட்டுக் குற்றமாகும்.
எனவே, தமிழர்களையும், அவர்களின் தாயகத்தையும், பொறுக்கூறல் உரிமையையும் வெளிப்படையாக அங்கீகரிக்க வேண்டும்.
தமிழர் மீதான இனப்படுகொலையையும் தொடர்ச்சியான மீறல்களையும் விசாரிக்க சர்வதேச பொறுப்புக்கூறல் மொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்று மனிதவுரிமைகள் செயற்பாட்டாளர் நிஷா பீரிஸ் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் நேற்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் வாசிக்க >>>
இன்று நள்ளிரவுடன் சில உணவுகளின் விலை குறைக்கப்படும்
மன்னார் காற்றாலை கவனயீர்ப்பு போராட்டம் – ரவிகரன் எம்.பி பங்கேற்பு
மலையக ரயில் சேவை பாதிப்பு – தண்டவாள புனரமைப்பு ரயில் தடம் புரள்வு
குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது!
ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு – ஐரோப்பிய ஆணையம்
காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த அமைச்சரவை அங்கீகாரம்


