பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ‘சர்வஜன பலய’ கட்சியின் லங்காபுர பிரதேச சபை உறுப்பினரான அப்துல் சமத் என்பவர் இன்று (16) காவல்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனர்த்த நிவாரண கொடுப்பனவு வழங்கல் தொடர்பில் எழுந்த பிரச்சினை யொன்றையடுத்து, ஏற்பட்ட மோதலில் கடந்த 14 ஆம் திகதி நபர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் இவர் முன்னதாக கைது செய்யப்பட்டார்.
குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபரின் பற்கள் உடைந்திருந்த நிலையில், சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினர் அன்றைய தினமே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே அந்த மோதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.
எனினும், அந்த மரணத்திற்கான உண்மையான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
உயிரிழந்தவரின் மரண பரிசோதனையின் போது ‘திறந்த தீர்ப்பு’ வழங்கப்பட்டதுடன், மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்பாகங்கள் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தாக்குதல் குற்றச்சாட்டுக்கு மேலதிகமாக, குறித்த மரணம் தொடர்பிலும் சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதன் பின்னணியிலேயே, கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவர் இன்று காலை மீண்டும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


